Sunday, October 30, 2011

நாகம்

ஆதிசேடன் கார்கோடகன் இருபெரும் நாகங்கள்

ராகுவும் கேதுவும் நாகத்தின் தலை வால்

ஜாதகத்தில் நாகம் தடையாகும்

ஐந்து தலை நாகம் அணை; காட்டு நாகம் கழுத்து மாலை எம் கடவுளருக்கு

புற்றடிக் கோயில்களில் நாகங்களும் கடவுளர்

பாம்பின் பகையுறவு பருந்தும் பகவான்தான்

பாம்பில் படுத்துறங்கிய பெருமான்

பருந்து வாகனத்தில் பவனி வருகிறார்

புற்றடிக் கடவுள்கள் சாமான்யனுக்கு - புற்றடிக்

கடவுளரின் கடவுள்கள் சமர்த்தர்களுக்கு - எனினும்

இவை ஏதுமறியா நாகம் பல்லிழந்து

படமெடுத்தாடியது பாம்பாட்டி மகுடி முன்.

Thursday, October 27, 2011

திசை

நால்திசை  பார்த்தமர்ந்தார் பிரம்மா

தென்திசை பார்த்தமர்ந்தார்  சிவன்

வாஸ்துவின் திசையில் வாசல்கள்

ஆகாத திசை சொல்லும் நாள்காட்டி

வலப்புறம் என்பதும் இடப்புறம் என்பதும்

திசையறியா மனிதர்களின் திசைகள்

கடலில் திசையறிய காந்தக் கைகாட்டி

வட இமயம் தென்குமரி

மேற்குமலை இன்ன பிற

கிழக்கிலிருந்து மேற்காகவோ

மேற்கிலிருந்து கிழக்காகவோ சுற்றும் பூமியின்

வடதிசையில் வடதுருவம்

தென்திசையில் தென்துருவம்- எனில்

சூரியனின் திசை எது? 

Wednesday, October 12, 2011

 வனம் சுமந்த குளுமை


வானம் அளந்த திமிர்


பெருங்காற்றின் முழுச்சுதந்திரம்


தன் சேயணைத்த தாய்மை


ஒரு மழைக்காலத்தின் நீர்மணிகள்


புதியது கொண்டு


பழையது தள்ளும் தன் லாவகம்


ஒரு ஒய்வு நேர சுத்தப்படுத்தலின் மிச்சம்


திடீரென விடுபட்ட தனிமை


ஒரு மதிய நேர இளங்காற்று


சிறு கூட்டின் கதகதப்பு


மெல்லியல்பில் இரும்புறுதி


இவற்றில் எதைச் சொல்கிறது,


ஓர் ஒற்றை யிறகு?